கொரோனாவால் களை கட்டும் பாலியல் தொல்லைகள்.

கொரோனா ஒரு புறம் – பாலியல் தொல்லை மறுபுறம் – தவிக்கும் பெண்கள்.

சகஜமாக இப்பொழுது எல்லோரும் எல்லா இடங்களிலும் ஏன் பள்ளி குழந்தைகள் கூட ONLINE எனப்படும் கணனி வழி நேரடி செயல்பாட்டில் பரிமளிக்கச் செய்துள்ளது இந்த குசும்பு பிடித்த கொரோனா …

இந்த தருணத்தில் கொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லையும் பல்கி பெருகி உள்ளது என்றால் அது மிகையில்லை. மட்டுமல்லாது மறுக்க முடியாத உண்மையும் கூட.

பெண்ணென்று பூமியில் பிறந்து விட்டாலே தொல்லைதானோ என்று இந்த கொரோனா பரவல் காலத்திலும் பெண்கள் அங்கலாய்க்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக பல நிறுவனங்கள் தங்களது அதிகாரிகளை, ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றன. இதற்காக அந்த நிறுவனங்கள், அவர்களுக்கு மடிக்கணினி, இணையதள வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளன.

ஆனால் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா?

பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்மணியின் அவலநிலை நமக்கு இதை எழுத தூண்டி உள்ளது.

சரி.. வீட்டில் இருந்து அலுவலக பணியை, நிறுவன பணியை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள பெண்கள் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறதா என்றால் அதுதான் இல்லை. அங்கு தான் ஆரம்பிக்கிறது பிரச்சினை.

கண்ட கண்ட நேரத்தில் மேலதிகாரியின் அழைப்பு …வீடியோ காலில் வர வேண்டும் என்றால் அவசர அவசரமாக உடை மாற்றிகொள்ள வேண்டும். இல்லை என்றால் பெண்கள் வீட்டில் இருப்பது போல் சாதாரணமாக பேசினால் அவர்களின் உடைகளை கூர்ந்து கவனிக்கும் வக்ர புத்தி…

மாநகர பஸ்சில், மின்சார ரெயிலில், மெட்ரோ ரெயிலில் பயணித்து பணித்தளம் செல்கிறபோது ஒரு விதமான பாலியல் தொல்லைகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது என்றால் வீட்டில் இருந்து வேலை செய்யும்போது வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஆன்லைன்வழியில் வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்வது பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று அவர்கள் கேட்கிறபோது, வெட்கமாக இருக்கிறது.

வழிகாட்டுதல்கள் இல்லை…

என்ன கொடுமை என்றால் வீட்டில் இருந்து பணியாற்றுகிறபோது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. இதற்கு காரணம், கொரோனா வைரஸ் எப்படி புதியதோ அதே போன்றுதான் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதும் பெண்களுக்கு புதிதாக வந்து இருக்கிறது. ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து, வீட்டில் இருந்து வேலை செய்து வரும் பெண்களிடம் இருந்து, தங்களுக்கு ஆன்லைனில் பாலியல் தொல்லைகள் வருவதாக தினமும் 4,5 புகார்களாவது வந்து விடுவதாக சொல்கிறார், பெண்களுக்கான இணையவழி பாலியல் தொல்லை தடுக்க அமைக்கப்பட்டுள்ள மும்பையின் ஆகன்சா தொல்லை தடுப்பு அறக்கட்டளையை நடத்தி வரும் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.

ஆனால் தேசிய மகளிர் கமிஷனுக்கு இத்தகைய புகார்கள் குறைவாகத்தான் வருகின்றனவாம்.

இது குறித்து சைபர் குற்ற தடுப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கையில் “பல பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைக்கு ஆளானாலும்கூட இது பற்றி முறைப்படி புகார் செய்வதற்கு முன் வருவதில்லை. அதே நேரத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்புகிறார்கள்” என்கிறார்கள்.

பணி பாதுகாப்பு பற்றி கவலை. ஏனென்றால் வெளியில் தெரிந்தால் இருக்கும் வேலையும் போய் இந்த CORANA காலத்தில் நிற்க வேண்டுமே என்ற பயம் …

இதுபற்றி ஆகன்சா ஸ்ரீவஸ்தவா குறிப்பிடும்போது, “ இன்னும் பல பெண்கள் தங்கள் வேலைக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது குறித்து கவலைப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினையை வெளியே பேசலாமா, வேண்டாமா என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிவதில்லை. பல பெண்கள் பிரச்சினை உருவாக்குகிறவர்கள் என்று தாங்கள் பேசப்பட்டு விடக்கூடாது என்றும் கருதுகிறார்கள்” என்கிறார்.

நுட்பமாக செயல்படும் ஆண்கள் தான் இதில் கதாநாயகர்கள்.

மேலும் அவர் சொல்லும்போது, “வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்கிறபோதே சில இடையூறுகள் ஏற்படப்போகின்றன. இது பெண்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. இதற்கு முன்னர் இப்படி வீட்டில் இருந்து வேலை பார்த்த அனுபவம் இல்லாததால், இது துன்புறுத்தலா என்பதையே ஊகிக்கத்தான் வேண்டியதிருக்கிறது. ஒருவர் எங்கே கோடு போடுகிறார்? ஒருவர் உடல்மொழியை ஆபத்தானது அல்லது அநாகரிகமானது என்பதை எப்படி வரையறை செய்வது? பொதுவாக ஆண் சகாக்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள். நட்பு வேண்டுகோள் விடுக்கிறார்கள். நட்புரிமை இல்லை என்ற நிலையில் கூட அவர்களது புகைப்படங்கள் மீது விமர்சிக்கிறார்கள். ஆன்லைனில் வருமாறு அழைக்கக்கூடாத  நேரத்தில் கூட அழைப்பு விடுகிறார்கள். பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த நுட்பமாக செயல்படுகிறார்கள்” என்கிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.

உதாரணங்கள்…

“ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் இரவு 11 மணிக்கு அவரது நிறுவன அதிபரிடம் இருந்து, ஒரு அவசர விஷயம் பேச வேண்டும், வீடியோகால் அழைப்பு வந்துள்ளது. ஆனால் அது வழக்கமான நாளில் எளிதாக கவனித்துக் கொள்ளப்படுகிற மின்னஞ்சல்தான் என்றாலும் கூட அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் எந்த சூழ்நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்ளும் குரூர புத்தி அல்லது அவரின் பெட்ரூமை எட்டிப்பார்க்க நினைக்கும் சின்ன புத்தி என்று தானே அர்த்தம்.
என்ன தான் வேலை என்றாலும் நேரம் – காலம். வழிமுறை என ஒன்று உண்டல்லவா?

என்று அந்தப் பெண் சொல்வதாக சுட்டிக்காட்டுகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா.

“இன்னொரு பெண்ணுக்கு வீட்டில் குழந்தைகளால் கவனம் சிதைந்தபோது, அவரது நிறுவன அதிபர், வீடியோ அழைப்பின்மூலம் அந்த பெண்ணுக்கு ஒதுக்கப்படுகிற வேலை செய்யும் திறன் இருக்கிறதா என கேட்டிருக்கிறார். இன்னும் சில பெண்கள் வீடியோகாலில் சக அதிகாரிகள், ஊழியர்கள் தகாத விதத்தில் உடை அணிந்து தோன்றுவதாகவும் புகார்கள் வருகிறது” என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஆகன்சா ஸ்ரீவஸ்தவா. ஆனால் வேலை இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத்தான் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் 2013 கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணியிடம் பற்றி வரையறை செய்கிறபோது, பணியாளர் தனது பணியின்போது செல்கிற எந்த இடமும் பணியிடம்தான் என கூறப்பட்டுள்ளது. நிறுவன அதிபர் அனுப்புகிற வாகனம் கூட பணியிடம்தான்.

உடனடி புகார்…

இணைய பாதுகாப்பு குறித்து பெண்களுக்கு கற்பிக்கிற இன்போசெக் கேர்ள்ஸ் என்ற அமைப்பின் வல்லுனர் ஒருவர் கூறும்போது, “நிறைய பெண்கள் புகார்கள் அளிப்பதில்லை. அவர்கள் விவாதிக்க மட்டுமே விரும்புகிறார்கள். பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் வேண்டுமென்றோ எந்த நோக்கம் இன்றியோகூட தவறான செய்திகளை ஆன்லைனில் ஆண்கள் அனுப்புகிறார்கள். எந்த நேரத்திலும் அழைப்பது, சந்திக்க சொல்வது நடக்கிறது. இது பெண்களுக்கு வசதிக்குறைவாக போய் விடுகிறது” என்கிறார்.

இதுபோன்ற பிரச்சினைகளை பெண்கள் எழுப்புகிறபோது, விவாதிக்கிறபோது, பிரச்சினை என வருகிறபோது உடனே அதை நிறுவன தலைமையிடம் முறையாக புகாராக எழுப்பி விடுங்கள் என்றுதான் தாங்கள் ஆலோசனை கூறுவதாகவும் சொல்கிறார். இப்படியாக கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்கிறபோது கூட பெண்கள் ஆன்லைன் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது.

இப்படி நேருகிறபோது அவர்களது பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுகிறது.

இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்ட ஆண் வர்க்கம் திருந்த வேண்டும். பெண்களை போகப்பொருளாக பார்க்கிற மடமை ஒழிய வேண்டும். அதைத் தவிரவேறு வழியில்லை என்பதே நிதர்சனம்.

= = = =  டெய்ல் பீஸ்:  =====

கொடுமை கொடுமை கொரோனா ஒரு புறம் கொடுமை என்றால் கொரோனாவால் இவர்கள் செய்யும் கொடுமை கொடுமையிலும் கொடுமை…

ஆதாரம் – நன்றி: Social media News

ராஜகர்ஜனை (சமூக அவலம் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன