ரோஜா.ரோஜா… அதிரடி அரசியல் ரோஜா…

 அரசியல்  ரோஜா.. ஆந்திராவின் ரோஜா…

துடிப்பான ஆளுமையுடன் அசைக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ள ரோஜா…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்துள்ளார்.

ரோஜாவின் அன்புக்காக ஆந்திராவை எழுதி கொடுக்கவில்லை என்றாலும், நகரி தொகுதியை எழுதிக்கொடுத்திருக்கிறார்கள் அந்த மக்கள். அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2-வது முறையாக நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா தனது அரசியல் தடத்தை அழுத்தமாக பதித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் 90 காலக்கட்டத்தில் நடிகை ரோஜா, இதயத்தில் பூத்த இனிய மலர்…செம்பருத்தியில் பூத்த இந்த ரோஜா, நடிகர் ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வெள்ளித்திரையில் வலம் வந்து, தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கினார்.

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜா, சில குத்துப் பாடல்களுக்கு நடனமாடிய பின், சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அப்போது தான், அவருக்கு, ஆந்திர அரசியல் கதவு மெல்லத் திறந்தது. 2000-ல் தெலுங்கு தேசம் கட்சிக்குள் அடியெடுத்து வைத்த ரோஜாவை, சொந்த கட்சியினரே ஆதரிக்கவில்லை. 2009-ம் ஆண்டு நடந்த அந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.

இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெளியேறிய நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இணைந்தார். சந்திரபாபு நாயுடு கற்றுத் தந்த அரசியல் பாலபாடம், சொந்த கட்சியினர் சொல்லிக் கொடுத்த அரசியல் துரோகம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த நுணுக்கங்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் முத்திரைப் பதிக்க ரோஜாவுக்கு கை கொடுத்தது. 2014-ம் ஆண்டு நகரி சட்டப் பேரவைத் தொகுதியில், களம் இறங்க உதவியதுடன், ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சிக்கான வியூகத்தையும் அமைத்துக் கொடுக்க உதவியது.

2014 சட்டமன்ற தேர்தல், ரோஜாவுக்கு வெற்றிக் கனியைக் கொடுத்தது. மக்கள் பணியில் தீவிரம் காட்டிய அவர், வீதி வீதியாக சென்று மக்கள் பணி ஆற்றினார். தமிழ் சினிமாவில் இருந்து நடிக்க மட்டும் கற்றுக்கொள்ளவில்லை அரசியலையும் தான்… முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெற்றி திட்டமான, அம்மா உணவகம், நகரி தொகுதியில், ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவகத்தை நடமாடும் உணவகமாக மாற்றி, நகரி தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் உலவ விட்டார் ரோஜா.

ஜெயலலிதாவிடம் மட்டுமின்றி, ஸ்டாலினிடம் இருந்தும் அரசியலை கற்றுக் கொண்ட ரோஜா, ஸ்டாலின் வழக்கமாக சொல்லும், கலெக்ஷன்… கரப்ஷன்.. கமிஷன் என்ற முழக்கத்தை, தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவே நீட்டினார். ஆந்திர அரசு நிர்வாகத்தில், சந்திரபாபு நாயுடுவுக்கு தெரிந்தது, கரப்ஷன்…கரப்ஷன்…கரப்ஷன்…என்ற ரோஜா-வின் முழக்கம் இந்த முறை நன்றாகவே எடுபட்டது.

தென்னிந்திய சினிமாவில், கோலோச்சிய நடிகை ரோஜா, தற்போது, அரசியலிலும் தனது தடத்தை ஆழமாக பதித்து அமைச்சராக அடுத்தக் கட்டத்தை எட்டிப்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில், 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, அரசியலில், லட்சிய தலைவியாக வலம் வருவாரா என்பதை காலம் நிரூபிக்கும்.

டெய்ல் பீஸ்…

விரைவில் இவருக்கு ஆந்திர அமைச்சர் என்ற பதவி அல்லது  சபாநாயகர் அந்தஸ்தை ஒய்.எஸ்.ஆர் கொடுக்க இருக்கிறார் என தெரிகிறது..

வாழ்த்துக்கள்

 

ராஜகர்ஜனை (அரசியல்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன