அமேசான் நிறுவனத்தின் 4 மணி நேர டெலிவரி சேவை 14 நகரங்களில் இருந்து 50 நகரங்களுக்கு விரிவாக்கம்

பெங்களூரு:

அமேசான் நிறுவனத்தின் 4 மணி நேர டெலிவரி சேவை 14 நகரங்களில் இருந்து 50 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பிரைம் சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கி வருகிறது அமேசான். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களில் ஒன்று அமேசான் நிறுவனம். இந்தியாவில் வரும் 2025 வாக்கில் மின்னணு வணிக சந்தை சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இப்போது உள்ள எண்ணிக்கையை காட்டிலும் 15 மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள மின்னணு வணிக நிறுவனங்கள் அதிவேக டெலிவரியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த முயற்சியை அமேசானும் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2017 முதல் இந்த சேவையை இந்தியாவில் பிரைம் சந்தாதாரர்களுக்கு அமேசான் நிறுவன வழங்கி வருகிறது. இருந்தாலும் இந்த சேவை குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில், 14 நகரங்களில் இருந்த இந்த சேவை இப்போது 50 நகரங்களுக்கு விரிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அமேசான் வெளியிட்டுள்ளது.

வயர்லெஸ், கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ், புத்தகம், பொம்மை போன்ற தேர்வு செய்யப்பட்ட சில வகை பொருட்கள் மட்டுமே இந்த 4 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. இது டெலிவரி பிரதிநிதிகளுக்கு சிறந்ததொரு வேலை வாய்ப்பாகவும் இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தங்களது சேவை கிடைக்கப்பெறும் பின்கோடுகளில் 97 சதவீதம் 2 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படுகிறது எனவும் அமேசான் தெரிவித்துள்ளது. இப்போது இந்நிறுவனம் ‘தி கிரேட் இந்தியன் சேல்’ என்ற சலுகையில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.