ஆயுத பூஜையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

சென்னை:

ஆயுத பூஜையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதேபோல, பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்துசெல்லும் சில பேருந்துகள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் பகுதிகளில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் விவரம்

வரும் 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மாற்றி இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் விவரம்: தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் – திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பைபாஸ் (மாநகரப் போக்குவரத்துக் கழக பூந்தமல்லி பைபாஸ் அருகில்) – வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் – மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்.

மறுமொழி இடவும்