இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கக் கோரி மனு

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், அகரம் பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கக் கோரி பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘‘கலெக்டர் மற்றும் அணு சக்தி ஆராய்ச்சித்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவின்படி, மணலில் 10 சதவீதம் கார்னைட், இல்மனைட் மற்றும் மோனோசைட் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன.

இந்தப் பகுதியை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இந்த கனிமங்களை அரசுக்கு உதவிடும் வகையில் விதிகளைப் பின்பற்றி கையாள வேண்டும். வழக்கறிஞர் கமிஷனர், கழுகு பார்வையிலான படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் அள்ளப்படுவது தெரிய வந்துள்ளது.

இதனடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத காவல் துறை அதிகாரி விசாரிக்க வேண்டும். இந்த மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனின் உயிர் மற்றும் அவரது சுதந்திரமான நடவடிக்கையை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்