இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது

மதுரை:

இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே குலமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உடையபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. வரும் 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

ஒரு சிலர் முதல் மரியாதை கோருகின்றனர். எனவே, தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘இறைவன் முன் அனைவரும் சமம். இறைவனை வழிபடுபவது தான் நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றனர். பின்னர், ‘‘இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது’’ என உத்தரவிட்டனர்.