உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம்

புதுடெல்லி:

செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். அவர், கடந்த 2019-ம் ஆண்டும் பதக்கம் வென்றிருந்தார்.

இந்தத் தொடரில் வினேஷ் போகத் தகுதி சுற்றில் 0-7 என்றகணக்கில் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி கண்டிருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் வினேஷ் போகத் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தன் மீதான சமூக வலைதள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் 28 வயதான வினேஷ் போகத். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “தடகள வீரர்கள் மனிதர்கள். ஒவ்வொரு முறைபோட்டி அறிவிக்கப்படும் போதும் ரோபோக்கள் போன்று இயங்க முடியாது.

இந்த கலாச்சாரம் எல்லா நாட்டிலும் உள்ளதா அல்லது இந்தியாவில் மட்டும்தான் உள்ளதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு நபரும், தொழில்முறை வீரர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்க்கைப் பயணத்தில் பல தடைகளைக் கண்டிருப்பார்கள்.

விளையாட்டில் பலரும் தங்களை (சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்கள்) நிபுணர்களாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரரை எப்படிப் பயிற்சியின் மூலம் முன்னேற்றுவது, வீரர்களின் முயற்சிகள், தடைகள் பற்றி தங்களுக்குத் தெரியும் என எண்ணிக்கொள்கிறார்கள்.

விமர்சனங்களை கூறுவது எளிது, ஏனென்றால் போட்டியை பார்த்துவிட்டு ஒரு நாளில் தங்களது பணியை முடித்துவிடுவார்கள். ஆனால் இந்த விஷயங்கள் வீரர்களின் நிலை, கடினமான காலக்கட்டத்தில் அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை உணரமாட்டார்கள்.

என்னுடைய சக வீரர்களுக்கு கூறுவது என்னவென்றால், நம்முடைய தொடர் முயற்சிகள் மூலமாக இந்தக் கலாச்சாரத்தை ஒருநாள் நாம் மாற்றுவோம் என்பதுதான்” என்றார்.