கடலுார்-அதிக ஒலி எழுப்பும் மற்றும் சரவெடிகளை வெடிக்க தடை உள்ளதால், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம்

கடலுார்-அதிக ஒலி எழுப்பும் மற்றும் சரவெடிகளை வெடிக்க தடை உள்ளதால், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

‘தீபாவளி’ மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் உடலளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, வெடி என்ற சந்தோஷம், உயிர், உடமைக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், பட்டாசு வெடிப்பதில் அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.

பட்டாசுக்கு தடைகோரி கடந்த 2018 ல் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும், பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்திட அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளிபண்டிகையன்று காலை 6:00 மணி முதல் 7:00 வரையும், இரவு 7:00 மணிமுதல் 8:00 வரையில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்குநேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோர்ட் அறிவித்த நேரத்தையே கடைபிடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ” பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுற்றுச்சூழலை, பாதிப்பு இல்லாமல், பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

எனவே, குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை 6:00 மணிமுதல் 7:00 வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8 வரை மட்டுமே பசுமைபட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக் கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை வெடிக்கக்கூடாது.

எனவே, பட்டாசு வெடிக்கும் விஷயத்தில், அரசு அறிவுறுத்தும் பாதுகாப்பு விதிமுறைகளை கையாள வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.