சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.

2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. அண்மையில் இறுதிப் பரிந்துரைகளுக்கான 15 போட்டித் தெரிவுகளில் இடம்பெற்றுள்ள ஷார்ட் லிஸ்ட் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தத் தெரிவுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் பிரிவில் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட குஜராத்தித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ (Chhello Show) இடம்பெற்றிருந்தது. மேலும், ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All That Breathes), ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ( Elephant Whisperers) ஆவணப்படங்களும், தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டுக் குத்து’ பாடல் ஒரிஜினல் சாங் பிரிவில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. தவிர, சிறந்த சர்வதேச வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் உட்பட பல்வேறு பிரிவுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜனவரி 12 முதல் 17 வரை இறுதிப் பரிந்துரைகளுக்கான பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருதுகள் மார்ச் 12-ம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஆவணப்பட பிரிவில் எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ( Elephant Whisperers) மற்றும் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All That Breathes) இறுதிப் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது. ‘செல்லோ ஷோ’ (Chhello Show) படம் ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் தேர்வாகவில்லை.

முன்னதாக, சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.