Warning: Creating default object from empty value in /home/chennaiw/public_html/rajakarjanai.com/wp-content/plugins/slick-popup/libs/admin/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், தமிழக மின் தேவை 16 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டியுள்ளது – rajakarjanai

சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், தமிழக மின் தேவை 16 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டியுள்ளது

சென்னை :

கோடை காலத்தை போல், சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால், தமிழக மின் தேவை 16 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டியுள்ளது. சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, எப்போதும் இல்லாத அளவுக்கு, மின்சாரம் அதிகளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக மின் தேவை தினமும் காலை, மாலையில் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட்; மற்ற நேரங்களில் 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கிறது.அதன்படி, நடப்பாண்டு ஏப்., 29ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு மின் தேவை, 17 ஆயிரத்து, 563 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களில் ஆகஸ்டில் மழை பெய்தது. இதனால், மின் தேவை குறைந்து தினமும் வழக்கமான, 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் இருந்தது.இந்நிலையில் ஒரு வாரமாக, கோடை காலம் போல வெயில் சுட்டெரிப்பதால், அனலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் வீடுகளில், ‘ஏசி’ பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் தேவை அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் மின் தேவை, 16 ஆயிரத்து, 500 மெகா வாட்டை தாண்டியது. அன்று மாலை, 6:40 மணிக்கு மின் தேவை 16 ஆயிரத்து 537 மெகா வாட்டாக இருந்தது.நேற்று காலை மின் தேவை, 15 ஆயிரத்து 500 மெகா வாட் என்றளவில் இருந்தது.மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் கிடைத்தது.

மீண்டும் சாதனை

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், 5,200 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலைக்கு, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. இம்மாதம் 13ம் தேதி, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, இதுவரை இல்லாத அதிக அளவாக, 3,658 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்தது. இந்த சாதனை, 21ம் தேதி முறியடிக்கப்பட்டது.அன்று எப்போதும் இல்லாத அளவாக, 3,782 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.