சீன அதிபரான ஜி ஜின்பிங், தைவானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதை தடுக்கும் நோக்கிலும், உக்ரைனை தங்களோடு இணைக்கும் நோக்கிலும், அந்த நாட்டின்மீது போர் தொடுத்திருக்கிறது ரஷ்யா. அதுவே மறுபுறம், தைவானை தங்களுடன் இணைக்கும் நோக்கில், அங்கும் போர் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது சீனா. என்ன பிரச்னை அங்கே?

தைவான் முன் கதை!

சீனாவில், 1911-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1927-ல் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இந்தப் போரில் தோல்வியுற்ற சீன தேசியக் கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் 168 தீவுகள் அடங்கிய தைவானில் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித் தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தைவான். 1975 வரை சீன தேசியக் கட்சியின் தலைவரான சியாங்-ன் சர்வாதிகார ஆட்சியிலிருந்த தைவான், அதன் பிறகு மெல்ல மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.

நீண்ட காலமாகவே தைவானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981-ல் `ஒரு நாடு; இரண்டு அமைப்புகள்’ என்ற ஆட்சிமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, “எங்களுடன் தைவான் இணைந்துகொண்டால், ஹாங்காங்கில் இருப்பதுபோல உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்” என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தைவான்.

தைவான் – சீனா

தைவானில், 2000-ம் ஆண்டில் முதன்முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து தொழில்துறை, தொழில்நுட்பத் துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறத் தொடங்கியது. இதைக் கண்டு அஞ்சிய சீனா, `தைவானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனி நாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே’ என்று சொல்லிவந்தது.

2005-ல் தைவானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது சீனா. இதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தைவானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார்.