சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (அக்.20) காலை அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். 23-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பிறகு வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24-ம் தேதி புயலாக மாறக்கூடும். 25-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 21-ம் தேதி (இன்று) கனமழை பெய்யக் கூடும்.
22-ம் தேதி டெல்டா மாவட்டங் கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.