ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் கதிா்வீச்சு தாக்கம் உள்ளதா? என அணுமின் நிலைய அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் ஆய்வு

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு, மாமல்லபுரம் பகுதியில் கதிா்வீச்சு தாக்கம் உள்ளதா? என அணுமின் நிலைய அதிகாரிகள், தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சென்னையில் வரும் ஜன.31 மற்றும் பிப்.2-ஆம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா, கனடா, ஜொ்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, தென் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா். இதற்காக தொல்லியல் துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் பிப்.1-ஆம் தேதி மாலை மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னா்கள் கைவண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பாா்க்கின்றனா்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தின் அருகே கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளதால் இந்த பகுதியில் கதிா்வீச்சு அபாயம் உள்ளதா? என கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலைய அதிகாரி ராமசுப்பிரமணியன், அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படையின் கமாண்டா் கெளஷல் குமாா் பரேவா குழுவினா் ரேடாா் கருவி மூலம் ஆய்வு செய்தனா்.