தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரவு பெய்த மழையினால் சித்தமல்லி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து ஏரியிலிருந்து தற்போது உபரி நீர் 1300 கன அடி முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு கரைகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றின் அருகேயோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதேபோல, குடியாத்தம் அடுத்த மோர்தாணா அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் குடியாத்தம் நகருக்குள் பாயும் கவுண்டன்ய ஆற்றில் தற்போதைக்கு 16 ஆயிரத்து 389 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாலும், இது மேலும் அதிகரிக்க கூடும் என்பதாலும் குடியாத்தம் கவுண்டன்ய ஆற்று கரையை ஓட்டிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் விசுவகுடி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், நீர்வரத்து முழுவதும் வெங்கலம் ஏரி வழியாக கல்லாற்றிற்க்கு அதிகப்படியான நீர் செல்ல உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகாபாடி, மறவநத்தம், என் புதூர், விகளத்தூர், ஆகிய கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மேலும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று பார்வையிடவே, நீர் நிலைகளை கடந்து செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பாலாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9வது நாளாக வாலாஜாபாத் -இளையனார்வேலூர் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் தற்போது மேலும் வெள்ளம் அதிகரித்து சுமார் 40 ஆயிரம் கனஅடி வரை நீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று வெள்ளம் குறைந்து சுமார் 20 ஆயிரம் கனஅடி வந்த நிலையில், ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாகவும், நேற்று இரவு முழுவதும் பொன்னை பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் தற்போது மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்