தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38% உயர்ந்து ரூ.279.70 கோடியானதாக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தெரிவித்தார்

தூத்துக்குடி:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 38% உயர்ந்து ரூ.279.70 கோடியானதாக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 511 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் மூலம் நாட்டின் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

கடந்த 23ம் தேதி சென்னையில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2022-23ம் நிதியாண்டின் 3ம் காலாண்டு மற்றும் 2022-23 டிசம்பரில் முடிந்த 9 மாத கால நிதிநிலை தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘2022-23ம் ஆண்டின் 3வது காலாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மொத்த வணிகத்தில் 5.69% வளர்ச்சியடைந்து ரூ.78,242 கோடி, வைப்புத்தொகை ரூ.43,440 கோடி. கடன்களின் மொத்தத் தொகை ரூ.34,802 கோடி, நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு தொகை ரூ.12,851 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

நிகர இலாபம் ரூ.279.70 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டில் இதே 3ம் காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்தது.)

இது 37.86% வளர்ச்சியடைந்துள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.534.27 கோடியாக உள்ளது (முந்தைய ஆண்டில் இதே 3ம் காலாண்டில் ரூ.452.76 கோடி) 18% வளர்ச்சியடைந்துள்ளது.

ஆர்ஓஏ 2% மற்றும் ஆர்ஓஇ 17.14% (முந்தைய ஆண்டின் 3ம் காலாண்டில் முறையே 1.62% மற்றும் 16.38 %) நிகர மதிப்பு ரூ.6,583 கோடியாக உயர்ந்துள்ளது.

(முந்தைய ஆண்டின் 3ம் காலாண்டில் ரூ.4,966 கோடி) இது ரூ.1,617 கோடி உயர்ந்து 32.56 % வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த வராக்கடன் மொத்த கடன்களின் தொகையில் 1.70% ஆகவும், நிகர வராக்கடன் 0.75% ஆக உள்ளது.

(முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3.08% மற்றும் 1.44%) பிசிஆர் 89.83% ஆக உள்ளது. (முந்தைய ஆண்டின் 3ம் காலாண்டில் 83.71%). வங்கி இந்த காலாண்டில் இரண்டு புதிய கிளைகளை திறந்துள்ளது, மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 25 புதிய கிளைகளைத் துவங்க திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.