தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரிக்கை

புதுடெல்லி:

தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்பதால், பட்டாசுகள் வெடிக்க, விற்பனை செய்ய அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டெல்லி அரசு இந்த தடையை அமல்படுத்தி அதனை கண்காணிப்பு சிறப்பு குழுக்களையும் அமைத்துள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் புகை, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளுகிறது.

எனவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு டெல்லி அரசு முழுத் தடை விதித்துள்ளது.

தடையை மீறி பட்டாசுகளை வாங்கினாலோ வெடித்தாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 6 மாதம் சிறை, ரூ.200 அபராதமும், பட்டாசுகளை விற்றால் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்’’ என்றார்.