தொடர் விடுமுறையை கொண்டாட, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நேற்று காலை முதலே சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. நகர் பகுதி நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தளர்வுகளால் திறக்கப்பட்ட மோயர் பாயின்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் நேற்று காலை முதலே இதமான வெயில் அடித்தது. இந்த இதமான சூழலையும், தூண்பாறை பகுதியில் தவழும் மேகமூட்டங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக இருந்து வருகிறது.

கூடுதல் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தாலும், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால் சிரமமாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு பார்க்கிங் வசதியை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.