நவராத்திரி ஸ்பெஷல் – ஆறாம் நாளின் சிறப்பம்சம் திருமகளின் அருள்

நலம் அருளும் நவராத்திரியின் ஆறாம் நாள் திருமகளுக்கு உரியது. தாமரை மலர் மீது அமர்ந்த செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியை இந்திராணி வடிவில் போற்றும் நாள் இன்று.

முருகனுக்கு உரிய சஷ்டி நாள் என்பதால் முருகப்பெருமானின் அம்சமான சப்த மாதர்களில் ஒருவரான கௌமாரியையும் இந்த நாளில் திருமகளாக எண்ணி வழிபடுவதும் உண்டு. துர்கையில் இன்று காத்யாயினியை வணங்குவது வழக்கம்.

லட்சுமி கடாட்சம்

இந்திரனின் அம்சமான இந்திராணி தேவி கற்பக மலர்களை தனது கூந்தலில் சூடியவள். இந்திரஜா என்று யானை இவளது வாகனம். வேண்டுவோருக்கு சொத்து சுகம் தரும் இவள் மிகுந்த சௌந்தர்யவதி. இல்லற வாழ்வில் சுகமும் நிம்மதியும் அருளும் தேவி இவள். இவளை வணங்க இல்லற பிரச்னைகள் நீங்கும் என்பர். மணமாகாத இளைஞர்கள் இவளை வழிபட்டால், அருமையான மனைவியையும், மணமாகாதப் பெண்கள் இவளை வழிபட்டால், குணமிக்க கணவனையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

இந்த நாளுக்குரிய தேவி இந்திராணி, கௌமாரி, காத்யாயினி என்று கூறினாலும் இது திருமகளுக்கு உண்டான நாள் வேண்டும் குறிப்பாக இது சௌபாக்கிய லட்சுமிக்கான திருநாள் என்றும் போற்றப்படுகிறது. சகல சௌபாக்கியங்களும் பெற விரும்புவோர் இந்த நவராத்திரி ஆறாம் நாள் திருமகளை கும்பத்திலோ விக்ரஹத்திலோ ஆவாஹனம் செய்து வழிபடுவது நன்மை அளிக்கும் என்பார்கள்.

பிரம்ம வைவர்த்த புராணத்தில் திருமகளின் பெருமைகள் யாவும் கூறப்படுகின்றன. அதில் லட்சுமி தேவியைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்!

‘எந்தெந்த இடங்களில் தானம், தர்மம், அடக்கம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.’

தேவர்கள் மட்டுமின்றி மானிடர்களும் தர்மத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி கொண்டால், மகாலட்சுமி சகலவிதமான தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் அளிப்பாள்’ என்பது பிரம்மதேவனின் வாக்கு. மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் காருண்ய தேவி எனப்படுகிறாள். விதியையும் மாற்றி ஒருவரை செல்வந்தனாக்கும் ஆற்றல் கொண்டவள் சௌபாக்கிய லட்சுமி.

லட்சுமி தேவி

செல்வங்கள் மட்டும் போதும் என்று விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள் என்று பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார். தேவியிடம் நல்ல ஒழுக்கம், சாத்வீகமான குணம், உதவும் மனப்பாங்கு அனைத்தையும் வேண்டினால் அதன் பொருட்டு செல்வங்களையும் வழங்குவாள் என்கிறார் நான்முகன்.

இதனால் திருமகளின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள்.

அப்போது அவளிடையே தோன்றிய சுவர்க்க வட்சுமி தேவலோகத்தை மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு திவ்ய மண்டலமாக மாற்றி அருளினாள். இதனால் இந்திரலோகம் ஒளிவீசியது. இந்திரனும் இந்திராணியும் பெருமை கொண்டார்கள் என புராணங்கள் கூறுகின்றன. தேவர்களும் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர்.

நவராத்திரி நாள் – 5: பெண்கள் கொண்டாடும் விழா மட்டுமல்ல, பெண்மையைக் கொண்டாடும் விழாவே நவராத்திரி!

வடதிசைக் காவலன் என்ற பெருமை கொண்ட குபேரன் சிறந்த சிவபக்தரும்கூட. எல்லாவகைச் செல்வங்களையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமியின் கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன். மகாலட்சுமியின் அருள் பார்வை பெற்றவர்களுக்கு உலகச் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். அதற்கு திருமகளின் அருளும் ஆசியும் வேண்டுமென புராணங்கள் கூறுகின்றன.

காத்யாயினிதிருமகள் என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் அல்லாது, மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டு வகைச் செல்வங்களையும் அளிப்பவள். அதில் ஞானமும் மோட்சமும் அடங்கும் என்பதும் உண்மை. திருமகள் எங்கே இருக்கிறாள் என்ற கேள்விக்கு ‘என் நெஞ்சில் மட்டுமல்ல, எவர் ஒருவர் தர்மத்தைக் கடைபிடித்து ஒழுக்கத்துடன் வாழ்கிறாரோ, அவர்கள் எல்லோரின் நெஞ்சிலும் திருமகள் நிலைத்து இருந்து அருள்புரிவாள் என்பதே உண்மை!’ என்கிறார் பெருமாள்.

நவராத்திரி ஆறாம் நாள்:

திதி: சஷ்டி

அம்பாள்: இந்திராணி,காத்யாயினி

கன்னியா பூஜை: 5 வயது சிறுமிக்கு இந்திராணி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: தேங்காய் சாதம், தேன்குழல், லட்டு, இளநீர் பாயசம், சீடை, காராமணி சுண்டல்.

கோலம்: கடலை மாவு கோலம்.

புஷ்பங்கள்: செம்பருத்தி, மல்லிகை, தாமரை, செண்பகம், மகிழம்பூ

இலை: வன்னி, வில்வம், மாவிலை.

பழங்கள்: சீத்தாப்பழம், சாத்துக்குடி, வாழை

வஸ்திரம்: கருஞ்சிவப்பு, வெண்மை பட்டாடை

பாடலுக்கான ராகம்: நீலாம்பரி ராகம்.

ஆபரணம்: வெள்ளைக்கல், குண்டுமணி போன்ற மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு நாணயங்கள்.

ஆறாம் நாளுக்கான பலன்கள்: விரும்பிய வரன் கிடைக்கும். வரவேண்டிய பண வரவு வந்து சேரும்.

மறுமொழி இடவும்