நவராத்திரி ஸ்பெஷல் – ஏழாம் நாளின் மகிமை கலைமகளின் அருள்

நன்மைகள் அருளும் நவராத்திரியின் ஏழாம் நாள் கலைமகளுக்கு உரியது என்பர். முதல் 3 நாள்கள் சக்திக்கும், அடுத்த 3 நாள்கள் திருமகளுக்கும், கடைசி 3 நாள்கள் சரஸ்வதிக்கும் உரியது என்பார்கள்.

வெள்ளைத் தாமரை மீது அமர்ந்து ஞானத்தை கல்வியை கலைகளை அள்ளி வழங்கும் கலைமகளை சாரதா தேவியாக சாம்பவி அன்னையாக போற்றும் நாள் இன்று. சப்தமி என்பதாலும் ஏழாம் நாள் துர்கையாக காளராத்திரி தேவியையும் இந்த நாளில் வழிபடுவது உண்டு.

சரஸ்வதி

சாம்பு என்ற திருநாமத்தால் துதிக்கப்படுபவர் ஈசன். சாம்பு என்றால் அச்சம் தீர்ப்பது என்று பொருள். சாம்புவின் துணைவி சாம்பவி. சாம்பவி என்றால் அச்சம் தீர்ப்பவள், அன்பானவள், கருணையுள்ளம் கொண்டவள் என்கின்றன சாஸ்திரங்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் 122-ம் நாமமாக விளங்குவது சாம்பவி. விஷ்ணுசகஸ்ரநாமத்தில் 38-வது திருநாமமாக விளங்குவதும் சாம்பவி என்ற திருநாமமே.

அன்னை கலைமகள் சண்ட முண்டர்களை வதைக்க உதவி செய்யும் பொருட்டு பொன் பீடத்தில் அமர்ந்து, வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளிய வடிவமே சாம்பவியின் திருக்கோலம். கைகளில் வீணை, அபய கரம் என்று சாந்த வடிவில் அன்னை காட்சி அருளினாலும், அதிலும் ஒரு வீரமான தோற்றம் இருப்பது தெரியும். இந்த நாளில் சாம்பவியை வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்குவதோடு, வீண் அச்சங்கள், துர்சக்திகளின் மிரட்டல் போன்ற சங்கடங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி

ஏழாம் நாள் போரில் அன்னை சாம்பவி சண்டமுண்டர்களை வதம் செய்து ஞான வடிவில் காட்சி அளித்து தேவர்களின் அச்சங்களை நீக்கினாள் என்று கூறப்படுகிறது. அதேபோல் நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று துர்க்கையின் ஏழாவது வடிவமான காளராத்திரி வழிபாடும் முக்கியமானது என்பர். காள என்றால் கரிய என்றும் ராத்திரி என்றால் மங்கலம் என்றும் பொருள். கரிய நிறத்துடன் மங்கலங்களை அள்ளித் தருவதாலேயே இவளுக்குக் காளராத்திரி எனப் பெயர் உண்டானது.

இந்தக் காளராத்திரியின் வடிவம் தீய சக்திகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. அடர் கரிய நிறமம் நான்கு கரங்களும் கொண்டவள். வஜ்ராயுதமும், வாளும் கொண்டு மற்ற இரு கரங்கள் வர, அபயம் தரும். இவள் பார்வை பட்டாலே துன்பங்களும், பாவங்களும் தொலையும். துர்சக்திகள் பயந்து ஓடும், எதிர்மறை ஆற்றல் அழியும் என்றும் நம்பப்படுகிறது. எனினும் இவளின் உருவம் உண்மையான பக்தர்களுக்கு அச்சம் தராமல் நன்மை தருவதால் இவரை ‘சுபங்கரி’ என்றும் போற்றுவர்.

ஜகத்குரு ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில்…

“அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா

ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ

ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா!’

என்ற ஸ்லோகத்தில் அம்பிகையும் சரஸ்வதியும் வேறு வேறானவர்கள் இல்லை என்று பாடுகிறார். ‘இடைவிடாது சிவநாமங்களை ஜபிப்பதால் சிவந்திருக்கும் உன் நாவில் அந்த கலைமகள் குடி இருக்கிறாள். உன் அம்சமாகவே விளங்கும் அந்த கலைமகளை வணங்குகிறேன்!’ என்கிறார் ஆதிசங்கரர். இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் நினைவு ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.

கலைமகளின் அம்சமாய் இந்த நவராத்திரி ஏழாம் நாளில் அருளும் தேவியை மனம் குளிர வழிபட்டு வேண்டினால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி நலம் சேரும் என்பது நம்பிக்கை.

கன்னியா பூஜை

நவராத்திரி ஏழாம் நாள்:

திதி: சப்தமி

அம்பாள்: கலைமகள், சாம்பவி, காளராத்திரி தேவி

கன்னியா பூஜை: 8 வயது சிறுமிக்கு பிராக்மி மகா சரஸ்வதி என்ற திருநாமம் கொண்ட திருக்கோலம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம்: எலுமிச்சம் பழ சாதம், பாயாசம், கற்கண்டு சாதம், புட்டு, பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல்.

கோலம்: திட்டாணிக் கோலம்.

புஷ்பங்கள்: தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை

இலை: விபூதி பச்சிலை, துளசி, வில்வம்.

பழங்கள்: பேரீச்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி

வஸ்திரம்: கருஞ்சிவப்பு, வெண்மை பட்டாடை

பாடலுக்கான ராகம்: பிலஹரி ராகம்.

ஆபரணம்: வெள்ளி, தங்கம் போன்றவைகளால் ஆன மாலைகள்.

தாம்பூலம்: வெற்றிலை பாக்கோடு மாதுளை பழம்.

ஏழாம் நாளுக்கான பலன்கள்: ஞானமும் கல்வியும் கலைகளில் தேர்ச்சியும் கிடைக்கும்.

மறுமொழி இடவும்