நவராத்திரி ஸ்பெஷல் – நான்காம் நாளின் மகிமை

நலங்களை அள்ளி வழங்கும் நவராத்திரி நாட்களில் இன்று நான்காம் நாள். நவராத்திரி என்பதே அன்னையின் ஒன்பது அவதாரங்களை கொண்டாடி வழிபடும் ஒரு நிகழ்வே ஆகும்.

துர்கை அம்மன், அளவின்றி பாய்ந்தோடும் ஆற்றலின் அடையாளம். இந்த ஒன்பது நாட்கள் வழிபாடும் அன்னையின் ஒன்பது அவதாரங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டவை.

இதனை முறைப்படி நாம் வழிபடுவதன் மூலம் அனைத்து நல்லவைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், நான்காம் நாளான இன்று அன்னையின் நான்காம் அவதாரமான குஷ்மந்தா தேவியை வணங்குவது நம் மரபு.

குஷ்மந்தா என்கிற பெயரின் பொருள் இந்த உலகை படைத்தவர் என்பது ஆகும். மகா விஷ்ணு இந்த பிரபஞ்சத்தை உருவாக்க முற்பட்ட போது, மாதா குஷ்மந்தா புன்னகைத்ததாகவும் அப்போது மொட்டில் இருந்து அவிழும் மலர் போலே இந்த பிரபஞ்சம் உதித்ததாகவும் ஒரு கதை உண்டு.

ஒன்றுமற்ற நிர்மூலத்திலிருந்து இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதாலே அவள் ஆதிஸ்வரூபி என்றும் ஆதிசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.

கு என்னும் ஒலிக்கு சிறிய என்று பொருள். உஷ்மா என்றால் ஆற்றல் என்று பொருள், அண்ட என்றால் அண்டம் என்று பொருள் இந்த ஒட்டு மொத்த அண்டத்தையும் தன் புன்னகையால் மலர்த்தியவள் அன்னை குஷ்மந்தா.

நான்காம் நாளான இன்று அன்னையை வணங்குவதால் சகல விதமான அடிப்படைத் தேவைகளும் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைக்கிறது.

எட்டு கரங்களுடன்,ஓரு கையில் வில், அம்பு, ஆயுதம், தாமரை, கமண்டலம், அமுத கலசம், ஆகியவைகளை ஏந்தி சிங்க வாகனத்தில் அருள் புரியும் அன்னை, தன்னை வணங்குபவர்களுக்கு நல் ஆரோக்கியம், நிறைவான செல்வம் என அனைத்தையும் வழங்குபவராக இருக்கிறார்.

வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற புகழ், பெயர் மற்றும் பலம், ஆரோக்கியம் என சகலத்தையும் பெற தேவி துர்கையின் மற்றொரு அம்சமான மாதா குஷ்மந்தாவை வணங்குதல் அவசியம்.

அன்னைக்கு உகந்த நிறம் நீலம். அன்னையை வழிபடும் நான்காம் நாளில் அவருக்கு மல்லிகை மலர்களை அர்ப்பணிப்பது உகந்தது ஆகும்.

அன்னை வழிபடுகிற போது “ஆவும் தேவி குஷ்மந்தையை நமஹ ” என்கிற மந்திரத்தை பாராயணம் செய்து உச்சரிப்பதால் அன்னையின் அருளை ஒருவர் பரிபூரணமாக பெற முடியும்.

 

மறுமொழி இடவும்