”நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான, ‘சந்திரயான் – 3’ விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்,”

புதுடில்லி:

”நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான, ‘சந்திரயான் – 3’ விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான்  -  2’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2019-ல் விண்ணில் ஏவியது.

ஆனால், சந்திரயான் விண்கலத்தின், ‘லேண்டர்’ கலன் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்தது.

அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவை ஆர்பிட்டர் சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.

இந்நிலையில், சந்திரயான் – 3 திட்டத்தை இஸ்ரோ துவங்கியது. ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை, ‘லேண்டர், ரோவர்’ விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்த பணிகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: சந்திரயான் – 3 திட்டம் தயாராக உள்ளது. எதிர்பாராத விதமாக தவறுகள் நேர்ந்தாலும், அதற்கு மாற்றாக மற்றொரு திட்டம் உடனே செயல்பாட்டுக்கு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்.

மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தின் முதல் பரிசோதனையும் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.