பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு – தமிழக அரசு தீவிர ஆலோசனை

பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வை அறிவித்த தமிழக அரசு, வரும் 16ம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என அரசு அறிவித்தது.

இதையடுத்து பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  ஆனால், கொரோனா இரண்டாவது அலை வரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

பலநாடுகளில் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஜனவரி இறுதியில் அப்போதுள்ள சூழலை ஆய்வுசெய்து பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவர்கள், கல்வியாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்த சூழலில், வரும் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் உள்ளது.  பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகமே முடங்கிப்போயிருந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக படிப்படியாக தளர்வுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

டெய்ல் பீஸ் :-

என்னதான் கட்டுப்பாடுகள் சொன்னாலும், மக்கள் கேட்பதில்லை, பெரும்பாலானோர் முகக்கவசம் இன்றி நடமாடுவது வேதனை கவலையை அளித்துள்ளதாக என்று பலர் தெரிவிக்கின்றனர். சமூக இடைவெளி என்பதை மாணவர்களிடம் எப்படி சாத்தியமாகும் என்று அவர்கள் கூறும் கருத்தாக  உள்ளது. பொது போக்குவரத்து பயன்படுத்தும் போது, சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன