பவானி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 15 வது நாளாக கொடிவேரி அணை மூடப்பட்டது

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர் கன மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்த 15 நாட்களுக்கு முன் எட்டியது. அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 14 நாட்களாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பவானிசாகர் அணைக்கு நீர வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 5,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொடிவேரி அணையில் பாதுகாப்பு கம்பியை தாண்டி தண்ணீர் வெளியேறுவதால் 15வது நாளான நேற்று கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

இது வரை 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று 5,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கொடிவேரி அணையில் இருந்து அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பாலத்தின் மீது நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.