பா. ஜ. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, திருச்சியில், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்

 

அவர் கூறியதாவது: தி.மு.க.,வின், ‘ஹனிமூன்’ காலம் முடிந்து விட்டது, கடந்த நான்கு மாதமாக, நிலையான மனநிலையில் இல்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை அளித்தாலும், தி.மு.க., அரசு, மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு, நேர்மறை எண்ணம் இல்லை. மத்திய அரசும், பா.ஜ., கட்சியும், மாநில அரசுகளுக்கு, 100 சதவீதம் ஆதரவு அளித்து வருகிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகம் அபாயகரமாக மாறி வருகிறது. முன்னாள் முதல்வர் அண்ணா துரை பிறந்த நாளில், சிறையில் உள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் 700 பேரை விடுதலை செய்யும் அபாயகரமான முடிவுக்கு, பா.ஜ., கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சி.ஏ.ஏ., சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்றாலும், தி.மு.க., முஸ்லிம்களுக்கு எதிரானது, என்ற கருத்துக்களை பரப்பி வருகிறது. அதே போல், மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு எதிரானது இல்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும், இது மக்களுக்கு எதிரானது, என்று மிகைப்படுத்தி தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில், ஏழு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மறைக்க முயற்சி செய்யும் தி.மு.க., அரசு, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க., பா.ம.க.,வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ் மக்களுடன், எப்பொழுதும் இருப்போம்.

 

உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ., கட்சி போட்டியிடும். அதற்கான கூட்டணி குறித்து, கட்சித் தலைமை முடிவு எடுக்கும். கட்சியை பலப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.1962ல் இருந்த இந்தியா, இப்போது இல்லை. 2021ல் உள்ளது. இந்தியா தனியாக இல்லை; பல நாடுகளுடன் நட்புறவு கொண்டு உள்ளது. எந்த நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.