பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு தொடக் கத்தில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதுபெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியம் (பிஎம் கேர்ஸ் பண்ட்) உருவாக்கப்பட்டது.

கரோனா மற்றும் இதுபோன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பி.எம்.கேர்ஸ் நிதியத்துக்கு நிதியுதவி அனுப்பினர்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியத்தின் வாரிய அறங்காவலர்கள் குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அறங்காவலர்களான மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா, டாடா சன்ஸ் ஓய்வுபெற்ற தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவல கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கிய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இந்த நிதியத்தின் அறங்காவலர் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். நாடு இக்கட்டான சூழலை சந்தித்த போது, இந்த நிதியம் முக்கிய பங்கு வகித்ததாக அறங்காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு உதவி

இக்கூட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 4,345 குழந்தைகளுக்கு உதவும் திட்டம் உட்பட இந்த நிதியத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அவசர நிலை மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

முன்னாள் இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ராஜிவ் மெகரிஷி, இன்போசிஸ் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டீச் பார் இந்தியா இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோரை பிஎம் கேர்ஸ் நிதியத்தின் ஆலோசனை வாரிய உறுப்பினர்களாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள் மற்றும் ஆலோ சகர்களின் நீண்ட அனுபவம் மற்றும் பங்களிப்பு காரணமாக இந்த நிதியத்தின் செயல்பாடுகள் மேலும் சிறப்படையும் என பிரதமர் மோடி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.