பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்

புதுடெல்லி:

பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் 29-ம் தேதி நடைபெறுகிறது.

வரும் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக சமர்ப்பிக்கும் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

இந்த கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், அனைத்து துறைகளையும் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அமைச்சர் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு அறிவுரைகளை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அமைச்சர்கள் அனைவரும் அயராது பாடுபட்டு மத்திய அரசின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தனது ஆசையை பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், அடுத்த ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.