பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘56 இன்ச் மோடி ஜி’ என்ற சிறப்பு சாப்பாட்டை டெல்லியைச் சேர்ந்த உணவு விடுதி நேற்று முதல் 26-ம் தேதி வரை விற்பனை

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘56 இன்ச் மோடி ஜி’ என்ற சிறப்பு சாப்பாட்டை டெல்லியைச் சேர்ந்த உணவு விடுதி நேற்று முதல் 26-ம் தேதி வரை விற்பனை செய்கிறது. இந்த உணவை சாப்பிட வருபவர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி கன்னாட் பிளேசில் உள்ளது அர்டார் 2.1 என்ற உணவு விடுதி. இது பிரதமரின் பிறந்த நாளை தனிச்சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இந்த உணவு விடுதியின் உரிமையாளர் சுமித் கலாரா கூறியதாவது:

நான் பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன். அவரது பிறந்த நாளில் நாங்கள் தனிச்சிறப்பான பரிசு அளிக்க விரும்புகிறோம். அதனால் ‘56 இன்ச் மோடி ஜி’ சாப்பாடு என்ற பிரம்மாண்டமான சாப்பாட்டை எங்கள் உணவு விடுதியில் வழங்குகிறோம். பிரதமரை நேசிப்பவர்கள் இந்த உணவை உண்டு மகிழலாம்.

இந்த உணவை சாப்பிடுபவர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. சாப்பிட வரும் தம்பதியரில் யாராவது ஒருவர், 58 வகை உணவை 40 நிமிடத்தில் சாப்பிட்டால் அவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசு வழங்குவோம். செப்டம்பர் 17-ம் தேதி முதல் செப்டம்பர் 26-ம் தேதி வரை எங்கள் உணவு விடுதியில் சாப்பிடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கேதார்நாத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். ஏனென்றால் அது பிரதமர் மோடிக்கு பிடித்த இடம். இவ்வாறு உணவு விடுதியின் உரிமையாளர் சுமித் கூறினார்.