பிறப்பின் ரகசியம்..சிந்தனை தெளிவு

பொதுவாகவே ஆன்மீகம், சிந்தனை மற்றும் ஞானிகள் என்றால் இவைகளை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று பல மகானுபாவர்களுக்கு தோன்றக் கூடிய உள்ளக்கிடக்கை ..

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நேரத்தில் ஒரு ஞானியை சீண்டிய இளைஞர்களைப் பற்றி பார்ப்போம்..

ஒரு சூபிஞானியின் புகழ் நாடெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அவரிடம் யார் என்ன கேள்வியைக் கேட்டாலும், எத்தனை கேள்விகளை கேட்டாலும் தெளிவாகவும், சுருக்கமாகவும், அறிவுப்பூர்வமாகவும் விடை சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

அதே நேரத்தில் ஆழ் கடலின் மையத்தை போல் சலனமில்லாமல் அடக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்.
.
அவர் ஓர் ஊருக்கு வந்தார். அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரது ஆற்றலை நன்கு உணர்ந்தவர்கள்.

இளமையின் துடிப்பு அவர்களுக்குள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

அந்த துடிப்பில் அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று சிலர் நினைத்தனர். கேள்விகளாலேயே அந்த வேள்வியைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

சுருக்கமாகப் பதில் சொல்ல முடியாதபடி ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அவமானப்படுத்த திட்டமிட்டனர்.

பல நாட்கள் நன்றாகச் சிந்தித்து ஒரே ஒரு கேள்வியைத் தேர்வு செய்தனர். இளமையின் மிடுக்கோடும், ஆணவத்தின் மமதையோடும் அவரிடம் சென்றனர்.

இளைஞர்களைப் பார்த்தார்  ஞானி… அன்புடன் அவர்களை வரவேற்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சினையா?’ என்று கேட்டார்.

எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. உங்களுக்குத்தான் இன்று பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது’, என்றனர். `அப்படியா!…, சரி சொல்லுங்கள்’, என்றார்.

வேறொன்றுமில்லை, நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு சுருக்கமாக நீங்கள் உடனே பதில் சொல்லியாக வேண்டும்’ என்றனர். `சரி! கேளுங்கள் முயற்சி செய்து பார்க்கிறேன்’.

.
இந்த உலகில் எந்தெந்த உயிரினங்கள் குட்டி போடுகின்றன?

எந்தெந்த உயிரினங்கள் முட்டை இடுகின்றன? – இதுதான் கேள்வி.

இந்தக் கேள்விக்கு நிச்சயமாக அவரால் பதில் சொல்ல முடியாது, ஒரு வேளை சொன்னாலும் நீண்ட பட்டியலே போட வேண்டியிருக்கும்.

நாம் கேட்டபடி சுருக்கமாகச் சொல்ல முடியாது, என்றெல்லாம் அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தனர்.

சூபி மகானோ இரண்டே இரண்டு வரிகளில் இதற்குப் பொருத்தமாய், பொறுமையாய் விடை சொன்னார்.

காதுகள் வெளியே உள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும், காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டை இடும்’.

சூபி ஞானியார் சொன்னதும் இளைஞர்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்தனர்.

அடடா! இதுதானே உண்மை.

மிகவும் தெளிவடைந்து ஆன்மீகம் மற்றும் சமூக நலத்திற்காக பாடுபட ஆரம்பித்தனர்.

டெய்ல் பீஸ் ..

இயற்கையின் படைப்பு இப்படித்தானே உள்ளது. பிறப்பின் ரகசியத்தை இரண்டே வரிகளில் சொன்ன அந்த சூபிஞானியின் அறிவை..மெய்ஞானத்தை கண்டு அவர்கள் அதிர்ந்து போயினர்.மட்டுமல்லாது பல ரகசியங்களும் மிகவும் சூட்சுமமாக மற்றும் அதே சமயத்தில்  மிகச் சாதாரணமாகத்தான் உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன