மடிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், அப்பகுதியில் சிக்னல் அவசியம்

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டள்ள நிலையில், மடிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், அப்பகுதியில் சிக்னல் அவசியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பஜார் சாலை, சபரிசாலை, கார்த்திகேபுரம் சாலை, பொன்னியம்மன் கோவில் சாலை ஆகியவற்றை இணைக்கும் நான்கு முனைசந்திப்பு பிரதானமானது.நான்கு சாலையிலும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சந்திப்பை சுற்றி, 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன.குறிப்பிட்ட சந்திப்பில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள், மாநகர பஸ்கள் கடந்த செல்கின்றன.

பள்ளி நாட்களில், காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அரங்கேறி வருகின்றன.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திப்பில் இருந்த பழைய பஸ் நிறுத்தம் அகற்றப்பட்டது. அதன் பின்னும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் குறையவில்லை. இதற்கு நிரந்தர தீர்வாக, குறிப்பிட்ட சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மடிப்பாக்கம் நான்கு முனை சந்திப்பில் கடைகள், உணவகம், கோவில் என அமைந்துள்ளது. அங்கு வருவோர் தங்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்வதால் சந்திப்பு சுருங்கிப் போகிறது.மேலும், பிரதான சந்திப்பு என்பதாலும்,போக்குவரத்து அதிகம் இருப்பதாலும், அடிக்கடி வாகனங்கள் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால், இந்த பிரச்னை பெரியதாக தெரியவில்லை. தற்போது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில், காலை, மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு சிக்னல் அமைப்பதுதான். அதுவரை போக்குவரத்து போலீசார் நியமித்து, அப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மறுமொழி இடவும்