மணல் குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம் கே.வேப்பங்குளம் கிராமத்தில் மலட்டாறு பகுதியில் புதிதாக மணல் குவாரி துவக்கப்பட்டுள்ளது.

உரிய கள விசாரணையின்றி குவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுவட்டாரப்பகுதி கிராமங்கள் போர்வெல் மற்றும் கிணறுகளையே நம்பியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், மணல் குவாரியால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மணல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘எதன் அடிப்படையில் மணல் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது? மணல் குவாரி அனுமதி தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. ஆனாலும் விதிகளை மீறி அனுமதிக்கப்படுகிறது’’ என்றனர். பின்னர் அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்

மறுமொழி இடவும்