மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் தமிழ் அறிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கு விசாரணை

மதுரை :

மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் தமிழ் அறிந்த சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

தீரன் திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். உள்ளே நுழையும் மற்றும் வெளியேறும் இடத்தில் பயணிகளிடம் சோதனையிடும்போது ஹிந்தியில் பேசுகின்றனர். இது பயணிகளுக்கு புரிவதில்லை.

மதுரை, திருச்சி, துாத்துக்குடி விமான நிலையங்களில் பயணிகள் எளிதில் புரிந்து கொள்ள அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். தமிழ் அறிந்த பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலர், சிவில் விமான போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுருகன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: பாதிக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியும். மனுதாரர் தாக்கல் செய்ய முகாந்திரம் உள்ளதா, இம்மனு நிலைக்கத்தக்கதா என கேள்வி எழுகிறது.

மனுதாரர் தரப்பு: கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் 2 வாரம் ஒத்திவைத்தனர்.