‘லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி சேராது’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்

சென்னை :

‘லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி சேராது’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தனியார் ‘டிவி’க்கு அவர் அளித்த பேட்டி: நகர பஸ்களில் மகளிருக்கு இலவசம், கல்லுாரி மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் உதவி, பள்ளி மாணவர்களுக்கு காலை சத்துணவு திட்டம் ஆகிய மூன்றும், என் வரலாற்றில் பதிவாகி இருப்பதாக நினைக்கிறேன்.மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

அண்ணாதுரையின் உயிலில் மாநில சுயாட்சி பற்றி தான் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் கருணாநிதி, ஆட்சிக்கு வந்த பின் ஐந்து முழக்கங்களை வைத்தார். அந்த ஐந்து முழக்கங்களில் ஒன்று மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை, ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். அதைத் தான் நாங்களும் வலியுறுத்தி வருகிறோம். இன்று, மத்திய அரசு எல்லா அதிகாரத்தை பறித்து வருகிறது.

நிதி அதிகாரம், ஜி.எஸ்.டி., புதிய கல்விக் கொள்கை என, பல பிரச்னைகளை கொண்டு வந்து, மாநில அரசுகளை முடக்க நினைக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால், நிச்சயமாக மாநில சுயாட்சி பெற்றாக வேண்டும். அதற்கு பல மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஆங்காங்கே குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்ந்து, ‘பா.ஜ.,வுடன் எந்த சமரசமும் இல்லை; தேர்தல் கூட்டணி இல்லை. இப்போதுள்ள கூட்டணியுடன் பா.ஜ.,வை எதிர்த்து தான் நிற்கப் போகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், ‘அதில் என்ன சந்தேகம்? எந்த சந்தேகமும் பட வேண்டிய அவசியமில்லை!’ என கூறியிருக்கிறார்.

மறுமொழி இடவும்