விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் என்னும் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்றது

விஜயதசமியன்று, தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த தினத்தில், குழந்தைகள் தங்களது கல்விப் பயணத்தை தொடங்கும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி கோயில்களில் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் கோயிலில் ஏராளமானோர், வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கெடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு கல்விப் பயணத்தை தொடக்கி வைத்தனர். குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைத்தனர்.

பின்னர் தங்க மோதிரத்தைக் கொண்டு, குழந்தையின் நாவில் எழுதினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். இதே போல கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில், கன்னியாகுமரியில் உள்ள கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.