ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் அபய் சிங், எகிப்தின் கென்சி அய்மன்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் அபய் சிங், எகிப்தின் கென்சி அய்மன்.

சென்னை: இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, எச்சிஎல்-எஸ்ஆர்எஃப்ஐ ஆகியவை சார்பில் இந்திய சுற்றுப்பயணத்துக்கான முதற்கட்ட சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை சென்னையில் நடத்தியது.

இதில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 96-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 101-ம் நிலை வீரரான எகிப்தின் கலீத் லபீப்பை எதிர்த்து விளையாடினார். 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-4, 11-3, 11-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள எகிப்தின் கென்சி அய்மன், 391-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுனைனா குருவிலாவை எதிர்த்து விளையாடினார். இதில் கென்சி அய்மன் 11-7, 11-2,11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இரு பிரிவிலும் பட்டம் வென்றவர்களுக்கு தலா ரூ.9.70 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.