14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்

சென்னை,

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (வெள்ளிக்கிழமை) வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக 12-ந் தேதியன்று வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மிதமான முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அதன்படி, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.